×

சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படை அமைப்பு : தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா

சென்னை : வெப்ப அலை காலத்தில், தடையில்லா மின் விநியோகத்துக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நுகர்வோர் சேவை மையமான மின்னகம் அலுவலகத்தில் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா பேட்டி அளித்தார். அப்போது, சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தங்குதடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்; தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியது முதல் மாநிலம் முழுவதும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்காக, தலைமை செயலாளர் தலைமையில் முதல் அமைச்சரின் செயலாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்களுடன் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் தொடர் ஆய்வு நடைபெற்று வருகின்றது.

தமிழ்நாட்டில் கத்திரி வெயில் ஆரம்பித்து, மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கடந்த சில நாட்களாக மாநிலத்தின் மின்சார தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டு 20.04.2023 அன்று 19,387 மெகாவாட் இதுவரை பதிவான அதிகபட்ச மின் தேவையாக இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு, 02.05.2024 அன்று இதுவரை இல்லாத அளவிற்கு மாநிலத்தின் மின் தேவை 20,830 மெகா வாட் என்ற புதிய உச்சத்தை எட்டியது.

இந்த அதிகபட்ச மின் தேவையினை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தி, வெளி மின்சந்தை, மின் பரிமாற்றம் மற்றும் குறுகிய கால ஒப்பந்தம் மூலம் எந்த வித பற்றாக்குறையும் இல்லாமல் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (06.05.2024) சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலகத்தில் 24X7 இயங்கி வரும் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் பதிவான மின்சாரம் தொடர்பான பொது மக்களின் புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

மின்னகத்தில், பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறுவதற்காக, 3 முறைப்பணிகளில், ஒவ்வொரு முறைப்பணிக்கும் 2 மேற்பார்வையாளர்கள் உட்பட 65 பணியாளர்கள் கொண்டு 24×7 மணி நேரமும் இயங்கி வருகிறது. மின்னகம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை பெறப்பட்டுள்ள 23,97,957 புகார்களில் 23,93,832 புகார்கள் (99.82%) மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்னகத்தில், மின் தடை குறித்து பெறப்படும் ஒவ்வொரு புகாரும் உடனடியாக சரி செய்யப்பட்டு, புகார் குறித்த உண்மை நிலைமை சம்பந்தப்பட்ட புகார்தாரரிடம் அலைப்பேசி மூலம் உறுதி செய்யப்பட்டு புகார்கள் முடிக்கப்படுகின்றன.

மாநிலத்தின் மின்சாரத் தேவை மற்றும் மின் விநியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லை. மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கோடைக்காலத்தில், மின்சார விநியோக பாதையில் உள்ள மின் மாற்றிகள், புதைவட கம்பிகள் மற்றும் மின் கம்பிகளில் அவ்வப்போது ஏற்படும் பழுதுகள் காரணமாக ஏற்படும் மின் தடைகளை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரவு நேரங்களில் மின் விநியோக பாதையில் உள்ள மின் மாற்றிகள், புதைவட கம்பிகள் மற்றும் மின் கம்பிகளில் அவ்வப்போது ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரி செய்யும் பொருட்டு, 60 சிறப்பு நிலை குழுக்கள் (SQUAD) அமைக்கப்பட்டு, பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் இரவு நேரங்களில் விவசாய மின் இணைப்புகளின் பயன்பாடு அதிகமாக உள்ள காரணத்தால், ஒரு சில பகுதிகளில் உள்ள உயரழுத்த மின் பாதைகளில் சில இடையூறுகள் அவ்வப்போது ஏற்படுகிறது. இத்தகைய இடையூறுகளை நிவர்த்தி செய்வதற்காக, போர்க்கால அடிப்படையில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆய்வின் போது, தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனுக்குடன் சரி செய்யுமாறும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் தலைமை செயலாளர் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வின் போது, கூடுதல் தலைமைச் செயலாளர் / தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன், இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன், இயக்குநர்கள், மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படை அமைப்பு : தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா appeared first on Dinakaran.

Tags : 60 Flying Force Organization ,Chennai ,Chief Secretary ,Shivtas Meena ,Shivdas Meena ,Minnagam Office ,Service Centre ,Tamil Nadu Electricity Board ,60 Flying Force ,Dinakaran ,
× RELATED தடையின்றி மின்சாரம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை